MENUMENU

அஸ்ஸாஸ்ஸின்’ஸ் கிரீட் – திரை விமர்சனம்

வீடியோ விளையாட்டுகளாக உருவான கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பெரிய திரைக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பல பெரிய அளவிலான வெற்றியை தரவில்லை என்ற மனக்குறையும், அதிருப்தியும் பலகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!

விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.

இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.

‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.

ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.

அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.

புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.

படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.

கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.

இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன?

ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.

மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.

மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.

மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online