தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர்கள் பேரணியில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு.. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தெரிவித்துள்ளார்.