முப்பரிமாணம் படத்தில் சாந்தனு நடிகர் மட்டுமில்லை: இயக்குனர் விளக்கம்

சாந்தனு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் புதிய படம் ‘முப்பரிமாணம்’. இயக்குனர்கள் பாலா, கதிர் ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், ‘முப்பரிமாணம்’ குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் அதிரூபன் கூறும்போது, நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம்தான் ‘முப்பரிமாணம்’.

இப்படத்தில் சாந்தனு இரண்டு, மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சாந்தனுவை, இந்த படத்தில் வேறு விதமாக பார்க்கலாம். இந்த படத்திற்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு டெக்னிஷியனாகவும் கீழே இறங்கி வேலை பார்த்தார்.

அதேபோல், இதுவரையிலான படங்களில் துறுதுறுவென கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இப்படத்தில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒத்துக் கொண்டார்.

இப்படத்தில் ஒரு பார்ட்டி சாங் ஒன்றை அவர் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட 3 மாத காலம் நேரம் ஒதுக்கி, நிறைய டியூன்களை போட்டு கடைசியில் ஒன்றை தேர்வு செய்தோம்.

இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட 27 நடிகர்களை ஒன்று சேர்த்து படத்திற்காக புரோமோ சாங் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், இப்படத்தின் பின்னணி இசைக்காக 85 நாட்கள் செலவிட்டுள்ளோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். வருகிற பிப்ரவரியில் படத்தை வெளிக்கொண்டுவர முயற்சிகள் செய்து வருகிறோம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries