1am – திரை விமர்சனம்

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுசில் தங்கியிருக்கும் 3 பேரில் இரண்டு பேர் நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். கதாநாயகன் மோகன் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைக்கிறார்.

இந்த கொலை குறித்து துப்பு துலக்க வரும் போலீஸ் அதிகாரி பிரதீப், முதற்கட்டமாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரிக்கிறார். அப்போது, அப்பகுதியில் ஒரு பெண் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி திகிலை ஏற்படுத்துகின்றனர்.

அத்துடன் அந்தப் பேய், அந்த வழியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதாகவும், லிப்ட் கொடுப்பவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் கூற, விசாரணையை கெஸ்ட் அவுஸ் பக்கம் திருப்புகிறார் பிரதீப். கெஸ்ட் அவுஸ் வாட்ச்மேனை விசாரிக்கும்போது, சம்பவம் நடந்த அன்று 3 பேரும் ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவிக்கிறார்.

அவர்கள் அழைத்து வந்த பெண் யார்? கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா? இந்த கொலையின் பின்னணி? என்பதை படத்தின் மீதி கதை.

மிரட்டும் பேய், கெஸ்ட் அவுஸ் திகில் காட்சிகளுடன் கூடிய பதைபதைப்பான சூழ்நிலையை திரில்லிங்காக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராகுல். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து, திரில் கதையை படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது.

ஆனால், ரத்தினச் சுருக்கமான கதையை, 2 மணி நேரத்திற்கு இழுப்பதற்காக தேவையில்லாத காட்சிகளை அதிகமாக திணித்திருக்கிறார். அதுவும் வந்த காட்சிபோன்றே வருவதால் போரடிக்கிறது.

ரசிகர்களுக்கு திரில் அனுபவத்தை கொடுக்க வேண்டிய காட்சிகள்கூட, எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதால், ‘இவ்வளவுதானா?’ என எண்ணத் தோன்றுகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் காண முடிகிறது.

நாயகனாக வரும் மோகன் உள்பட அனைவரும் புதுமுகங்கள் என்பதால் தங்களுக்கு ஏற்ற வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகி சஸ்வதா, அழகான பேயாக வந்து மிரட்டுகிறார்.

இருந்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் பிரதீப், போலீஸ் கெட்டப்பில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் போலீஸ் கதாபாத்திரத்துக்குண்டான கம்பீரம் வரவில்லை.

படத்தில் பாடல்கள், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லை. சீரியசாக செல்லும் இப்படத்தின் மொத்த நம்பிக்கையே பின்னணி இசைதான். முக்கியமான தருணங்களில் திரில்லிங் காட்சியமைப்புக்கு ஏற்ப இசையில் மிரட்டல் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அரங்கம் அதிரும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒளிப்பதிவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண். ஒரு சில காட்சிகளில் சிறப்பாக வந்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்வதால் சரியான ஒளியமைப்பு இல்லை.

மொத்தத்தில் 1 ஏஎம், ‘முயற்சி’

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online