MENUMENU

ரஜினி அரசியலில் குதிக்க முடிவா?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். ரஜினி அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது வற்புறுத்தி வருகிறார்கள். போஸ்டர் அடித்து ஓட்டு கிறார்கள்.

இதுமட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகளும் ரஜினியை தனது பக்கம் இழுக்க முயன்று வருகின்றன. 1996-ம் ஆண்டு தி.மு.க.-த.மா.கா. கூட்டணி அமைத்த போது அவர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா தலைமையில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு ரஜினி எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. பல்வேறு சூழ்நிலைகளில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தது. ஆனால் அரசியலுக்கு வருவதை ரஜினி தவிர்த்தார். அரசியல் தனக்கு சரிப்பட்டு வராது என்றும் கருத்து தெரிவித்தார்.
பாரதீய ஜனதா இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் கட்சியாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. உத்திர காண்டிலும் வெற்றியை ருசித்தது. காங்கிரசுக்கு சாதகமாக இருந்த கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறது. என்றாலும் இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலமான கட்சியாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு கிடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். எனவே, இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சென்னை வந்தார். அப்போது ரஜினியை சந்தித்து பேசினார். என்றாலும், பா.ஜனதாவுக்கு ஆதர வாக அவர் குரல் கொடுக்கவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ரஜினியை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி நடந்தது. ஆனால் அவர் அதில் இருந்து நழுவி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இப்போது நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர் ரஜினியை சந்தித்தார். பின்னர் ‘‘இது டிரைலர். இனிதான் மெயின் பிக்சர் இருக்கிறது’’ என்று பேட்டி அளித்தார்.
இதையடுத்து ரஜினி ‘‘நான் இந்த இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை’’ என்று அறிக்கை வெளியிட்டார். என்றாலும், ரஜினி பா.ஜனதாவுக்கு வரவேண்டும் என்று கட்சியின் மேலிடம் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் 10 வருடங்களுக்கு பிறகு ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை வருகிற 2-ந்தேதி கூட்டி இருக்கிறார். இதற்கான கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற தலைவர்கள், செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி என்ன சொல்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் சமீபத்தில் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களை சந்திக்கவும், அவர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகளை வழங்கவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் அந்த பயணம் ரத்து ஆனது.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரசிகர்மன்றத்தின் எதிர்கால திட்டம் மற்றும் நடவடிக்கைகள் பற்றி ரசிகர்களின் கருத்தை ரஜினி கேட்டு அறிவார். அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்று கூறப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் வற்புறுத்தி வரும் நிலையில், ரசிகர்களுடன் ரஜினி நடத்தும் ஆலோசனை கூட்டம் அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online