MENUMENU

டோரா – திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள். செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்.

அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அவளது கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஆர்டர்கள் வருகிறது. அப்படி ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்கள் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.

கொடைக்கானலுக்கு செல்லும்போது, அங்கு வழியில் செல்லும் ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.

இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு சிக்கலில் மாட்டிக் கொண்ட நயன்தாரா அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்? அது கொலை செய்ய துடிக்கும் நபர்கள் யார்? நயன்தாராவை வைத்து ஏன் அந்த நபர்களை பழி வாங்குகிறது? என்பது படத்தின் மீதிக்கதை.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவுக்கு இப்படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது. முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையா உடனான காட்சிகளில் கலகலப்பான மகளாக வரும் நயன்தாரா, திகில் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

தம்பி ராமையா தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது சிறப்பு. அவரது ஒவ்வொரு வசனங்களும், செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. தந்தை-மகள் பாசத்திலும் கலக்கியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் பிரமாதம். பிளாஸ்பேக்கில் வரும் சிறுமியின் நடிப்பும் சிறப்பு. இவர்களை தவிர படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருப்பினும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குநர் தாஸ் ராமசாமி தனது முதல் படத்திலேயே காமெடி கலந்த திகில் படத்தை கொடுத்திருப்பதற்காக அவரை பாராட்டலாம். முதல் பாதி காமெடியாக மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், திகில் கொடுத்து நம்மை பயமுறுத்திருக்கிறார்.

அந்த அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். காரை வைத்துக் கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. கார் தானாகவே இயங்குவது உள்ளிட்ட ஒருசில காட்சிகள் மட்டும் படத்தை ஒரு பேண்டஸி படமாக காண்பித்துள்ளது.

படத்தின் பாடல்களும் நன்றாக உள்ளது. குறிப்பாக பிளாஸ்பேக்கில் வரும் பாடல் பார்க்கவும், கேட்கவும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையை பொறுத்தவரை விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார்.

காருக்கென்று தனியாக இவர் கொடுத்துள்ள தீம் மியூசிக் சபாஷ். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திரையில் பிரமாண்டம் காட்டுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் காட்சிகளை அவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘டோரா’ அனைவருக்கும் பிடித்தமானவள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online