MENUMENU

ஜூலியும் 4 பேரும் – திரை விமர்சனம்

கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி அல்யாவின் தந்தைதான். அந்த நாயை கடத்தி வந்ததற்காக அந்த கடத்தல் கும்பலுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கிறார் அல்யாவின் தந்தை.

இதுஒருபக்கம் போய்க் கொண்டிருக்கையில், வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அமுதவாணன், சதீஷ், விஜய் ஆகிய மூன்று பேரும் வேலை வாங்கித் தருவதாக கூறும் ஒரு மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்டோ ஓட்டுனரான ஜார்ஜ் உடன் நட்பாகிறார்கள்.

தாங்கள் இழந்த பணத்தை குறுக்கு வழியிலாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், ஒருநாள் ஜுலி வீட்டைவிட்டு வெளியேறி, எதையோ சாப்பிட்டு மயக்கமடைகிறது. அதை பார்க்கும் நான்கு நண்பர்களும் ஜுலியை காப்பாற்றி, அதன் உரிமையாளரான நாயகியிடம் ஒப்படைக்க, நாயகியும் இவர்களுக்கு நண்பர்களாகிறாள்.

நடந்த விஷயத்தை நாயகி தனது அப்பாவிடம் கூற, அவர் தனது உதவியாளரை அழைத்து நண்பர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கும்படி கூறிவிட்டு செல்கிறார். ஆனால், அவரது உதவியாளரோ இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த நண்பர்கள் ஜுலியை கடத்திவிடுகிறார்கள்.

ஜுலியை கடத்தியது யாரென்று தெரியாத நாயகியின் அப்பா, ஜுலி எங்கு சென்றது என்று தேடிவர, மறுபக்கம், ஜுலியை வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த கும்பல், மறுபடியும் அதை கடத்துவதற்கு திட்டம்போட்டு ஜுலியை தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜுலி என்ற பெயரில் காணாமல் போன பெண்ணை தேடி அலையும் போலீசார், சந்தேகத்தின் பெயரில் இவர்கள் பக்கம் பார்வையை திருப்புகின்றனர்.

இறுதியில், அந்த அதிர்ஷ்ட நாய் ஜுலி யாரிடம் சேர்ந்தது? அந்த நாயால் நண்பர்கள் நன்மை அடைந்தார்களா? அல்லது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகர்கள் அமுதவாணன், சதீஷ், விஜய், ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒன்றாகவே வலம் வருகின்றனர். அந்த வகையில் அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். அவர்களது நகைச்சுவையும் ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி அல்யா மனாசா, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கர், வழக்கம்போல் நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் சதீஷ் ஆர்.வி. ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற அவரது முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

தான் அறிமுகமாகிய முதல் படத்தையே திரையில் அழகாக காட்டியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார். நண்பர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்தால், என்னென்ன கலாட்டாக்கள் நடக்குமோ அத்தனையையும் நகைச்சுவையாக காட்டியிருப்பது படத்திற்கு ப்ளஸ்.

அதேநேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.

இசையமைப்பாளர் ரகு ஷ்ரவன் குமார், திரைக்கதைக்கு ஏற்றபடி நல்ல இசையை அளித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு ப்ளஸ். கே.ஏ.பாஸ்கரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘ஜுலியும் 4 பேரும்’ ஓட்டம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online