MENUMENU

கடம்பன் – திரை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் எனும் மலை கிராமத்தில் மலைவாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார் ஆர்யா. இந்த கூட்டத்திலேயே ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரனாகவும், துணிச்சல்காரனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இதே கூட்டத்தை சேர்ந்த நாயகி கேத்தரின் தெரசா, ஆர்யா மீது காதல் வலை வீசுகிறார்.

ஆனால், ஆர்யாவோ, கேத்தரின் தெரசாவின் அண்ணன் ராஜசிம்மனுக்கும் தனக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் கேத்தரின் தெரசாவை முதலில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் கேத்தரின் மீது ஆர்யாவும் காதல் வயப்படுகிறார்.

இந்நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான தாதுப் பொருட்கள் பூமிக்கடியில் புதைந்து கிடப்பதாக அறியும் சிமெண்ட் கம்பெனி உரிமையாளர் தீப்ராஜ் ராணா, மலைவாழ் மக்களை அங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த நினைக்கிறார். அடித்து விரட்டினால், அது அரசாங்கத்துக்கு தெரிந்து பெரிய விஷயமாகிவிடும் என்பதால், தந்திரமாக செயல்பட நினைக்கிறார்.

அதன்படி, சமூக சேவைகள் செய்துவரும் ஒய்.ஜி.மகேந்திரனையும், அவரது மகளையும் கடம்பவனம் மலைக்கிராமத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நல்லது செய்வதுபோல் நடித்து, அங்கிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில், இந்த திட்டம் ஆர்யா மற்றும் மலைவாழ் மக்களுக்கு தெரியவர, அவர்களை எதிர்த்து நிற்க துணிகிறார்கள்.

இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆர்யா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் முழுக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரது உடல்வாகை பார்க்கும்போதே பிரமிக்க வைக்கிறது. அதேபோல், செருப்பே அணியாமல் மரம், செடி, கொடிகள் இடையே பாய்ந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைக்கிறார்.

கேத்தரின் தெரசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை தனது நடிப்பால் அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவரைது அண்ணாக வரும் ராஜசிம்மன் பார்வையாலேயே மிரட்டுகிறார். முதலில் ஆர்யாவுக்கு எதிரியாகவும், பிறகு அவருக்கு உதவி செய்வதுமாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆர்யாவின் அப்பாவாக வரும் சூப்பர் சுப்ராய், மூப்பன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சிமெண்ட் கம்பெனி அதிபராக வரும் தீப்ராஜ் ராணா, கார்ப்பரேட் வில்லனாக வந்து ரசிக்க வைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவா. ஆனால், அவர் சொல்ல வந்த கருத்து, மலைவாழ் மக்களின் வலி, படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தம்.

இப்படத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது. ஆனால், அந்த கஷ்டங்களுக்கெல்லாம் இந்தப் படம் தகுதியானதா? என்பது சந்தேகம்தான்.

யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் கேமரா காட்டுக்குள் புகுந்து விளையாடியிருக்கிறது.

மொத்தத்தில் ‘கடம்பன்’ புதிய முயற்சி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online