MENUMENU

பாகுபலி 2 – திரை விமர்சனம்

போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள்.

இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா சத்யராஜும் செல்கிறார்.

அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்காவையும் பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவளது அழகிலும் மயங்குகிறார்.

அவளிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. கூடவே அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது ஈர்ப்பு வருகிறது.

அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார்.

இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள்.

அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.

 

அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார்.

இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்கிறது. அன்னையின் கட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார்.

முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள்.

ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை படம் முழுக்க டுவிஸ்டு மேல் டுவிஸ்டு வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும்போதே முந்தைய பாகத்தை நினைவுபடுத்துவதுபோல் முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது ரொம்பவும் அருமையாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது படத்திற்குள் நாம் எப்போது நுழைவோம் என்ற எதிர்பார்ப்பு நம்மில் தொற்றிவிடுகிறது.

பிரபாஸ் முந்தைய பாகத்தைவிட இந்த பாகத்தில் ரொம்பவும் வீறு கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கான மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி இவருடைய நடிப்பை பார்த்து நமக்கு வியப்பு வருகிறது. இந்த படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குந்தலதேசத்தில் கொள்ளையர்களுடன் சண்டைபோடும் காட்சியில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை வைத்து விடும் காட்சிகள், குந்தலதேசத்து மக்களிடம் பிரபாஸை மகிழ்மதியின் இளவரசன் என்று கட்டப்பா அறிமுகப்படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அனுஷ்கா முந்தைய பாகத்தில் அழுக்குத் துணியுடன் ஒருசில காட்சிகள்தான் வலம் வந்தார். இந்த பாகத்தில் அவருக்கு கூடுதல் காட்சிகள் இருக்கின்றது. அரசியாக அழகாக வந்து அனைவரையும் கவர்கிறார். வாள் சண்டையில் ரொம்பவும் கைதேர்ந்தவர்போல் நடித்திருக்கிறார்.

வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களிலும் துணிச்சலான பெண்ணுக்குண்டான நடிப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

ராணா பகைமை கலந்த நடிப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதியில் ரொம்பவும் அமைதியாகவே தனது காய்களை நகர்த்தும் இவர், இரண்டாம் பாதியில் தனது முழு ஆக்ரோஷத்தையும் காட்டும் விதத்தில் ரசிகர்களின் வெறுப்பை பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், ராஜமாதாவுக்குண்டான கம்பீரத்துடன் ரசிக்க வைக்கிறார். கம்பீரமாக பேசும் இவர் வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது.

நாசர் இந்த பாகத்தில் ரொம்பவும் சாதுர்யமாக காய் நகர்த்தும் சூத்ரதாரியாக பளிச்சிடுகிறார். ஒவ்வொரு முறையும் ராணா இவரை ஆசுவாசப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். கட்டப்பாவாக வரும் சத்யராஜ் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறார்.

முந்தைய பாகத்தில் ஆக்ரோஷமான படைத்தளபதியாக வந்த சத்யராஜ், இந்த பாகத்தில் தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியிலும் கலக்கியிருக்கிறார். அவை எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, நாம் எல்லோரும் எதிர்பார்த்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் காட்சியில் அவரது நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

கடந்த பாகத்தில் அனுஷ்காவுக்கு எந்தளவுக்கு குறைவான காட்சிகள் இருந்ததோ, அதைவிட குறைவான காட்சிகளே தமன்னாவுக்கு இருக்கிறது. முந்தைய பாகத்தில் இருந்த ஆக்ரோஷத்துடன் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதைக்கு வேறு எந்த இயக்குனரும் ஈடுகொடுக்க முடியாது என்ற அளவுக்கு இந்த பாகத்திலும் திரைக்கதை மெச்சும்படியாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் டுவிஸ்டு மேல் டுவிஸ்டாக நகர்ந்துக் கொண்டே செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பே தட்டவில்லை.

நிறைய புல்லரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. பிரபாஸ் அறிமுகமாகும் காட்சி பெரிதாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் மாஸாக இருக்கிறது. சரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக ராஜமௌலிக்கு எவ்வளவு பெரிய உயரிய விருது கொடுத்தாலும் போதாது. அவருக்கு விருது ஒன்று கொடுக்கவேண்டுமென்றால், அதை இனிமேல் உருவாக்கினால்தான் உண்டு.

அதேபோல், படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அவை அனைத்துமே ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. மதன் கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு ரொம்பவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வசனங்களும் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு.

மரகதமணியின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. அதை படமாக்கியவிதமும் ரொம்பவும் அருமை. பின்னணி இசை கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாகுபலி 2’ அழிக்கமுடியாத வரலாறு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online