திறப்பு விழா – திரை விமர்சனம்

நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

குடிப்பழக்கத்தை வெறுக்கும் நாயகன், குடியால் ஆங்காங்கே மயங்கி விழுந்துக் கிடக்கும் குடிமகன்களின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து, தேவையான பண உதவிகளையும் செய்கிறார்.

இவ்வாறு தனக்கென ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வரும் ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது. நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவித்த போது, அவளை காதலிக்க ஜெய ஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது நாயகனுக்கு தெரிய வர, அதனை எதிர்த்து போராடும் ஜெய ஆனந்த் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இவரது போக்கு பிடிக்காத போலி மதுபான கும்பல் இவரை போலீசில் சிக்க வைக்கிறது.

போலீசும் போலி மதுபான கும்பலுக்கு ஆதரவாக ஜெயஆனந்த்தை கைது செய்து மிரட்டி அனுப்புகிறது. இந்நிலையில், தனது மகளின் மனதை புரிந்து கொண்ட ரஹானாவின் தந்தை ஜி.எம்.குமார், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறார்.

தனக்கென சில கொள்ளைகள் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவிக்கும் ஜெயஆனந்த், பின்னர் ஜி.எம்.குமார் குடிப்பதை நிறுத்தினால் தான் நாயகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கிறார்.

நாயகனின் கோரிக்கையை ஏற்கும் ஜி.எம்.குமார் கடைசியாக ஒரு முறை குடிப்பதாக கூறி, தனது நண்பர்களுக்கும் மது வாங்கிக் கொடுக்கிறார். அந்த மதுவில் மர்ம கும்பல் போலி மதுபானத்தை கலந்து வைக்கிறது. அதனை குடித்த நாயகியின் தந்தை உள்பட பலரும் உயிரிழந்து விடுவதால், மறுபடியும் ஜெயஆனந்தை போலீசார் கைது செய்கின்றனர்.

பின்னர் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நாயகன், தனது கொள்கையான அந்த மதுபானக் கடையை மூட என்ன செய்தார்? மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா? மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா? நாயகன் – நாயகி என்ன ஆனார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

புதுமுக நாயகன் ஜெயஆனந்த் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நாயகி ரஹானா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

குடிகாரர்களாக ஜி.எம்குமார், பசங்க சிவக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்றபடி பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கின்னறர்.

தற்போதைய சூழலின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை சிறப்பாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி.

மது, மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை சுளிப்பு இல்லாமல் சிறப்பாக இயக்கிப்பதற்காக வீரமணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். நிலம் என்பவரின் வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை இழக்காமல், தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை படத்தின் இந்த மூலம் உணர்த்தி இருக்கின்றனர்.

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மதுவுக்கு எதிராக இப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் வசந்தரமேஸ் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

மொத்தத்தில் `திறப்பு விழா’ மதுபானக்கடையின் மூடு விழா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online