MENUMENU

மங்களபுரம் – திரை விமர்சனம்

டெல்லிகணேஷ் தனது பேரன், பேத்திக்கு கதை சொல்லுவதாக படத்தின் கதை ஆரம்பிக்கிறது.

மங்களாபுரம் ஜமீனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் திருமணமாகி ஜமீனுடன் இருக்கிறான். இளையவனான நாயகன் யாகவன் சென்னையில் படித்து வருகிறார். படிக்கும்போதே நாயகி காயத்ரியை காதலித்து அவளை திருமணமும் செய்துகொள்கிறான்.

சொந்த ஊருக்கு திரும்பும்போது அவரது அப்பா, அண்ணன், அண்ணி அனைவரும் இறந்துபோயிருக்கிறார்கள். அண்ணன், அண்ணி புகைப்படத்துக்கு மட்டும் மாலை போடப்பட்டிருக்க, அப்பாவின் புகைப்படம் இல்லாதது குறித்து யாகவனிடம் அதுபற்றி கேட்கிறார் காயத்ரி. ஆனால், யாகவனோ அவளிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவுகிறார்.

அன்றுமுதல் காயத்ரியின் உடம்பில் ஒரு ஆவி புகுந்துகொண்டு, யாகவனை அவளிடம் சேரவிடாமல் தடுக்கிறது. இறுதியில், அவள் உடம்பில் ஆவி புகுந்திருப்பதை அறியும் யாகவன் ஜோசியரின் உதவியை நாடுகிறான். அவரோ அந்த வீட்டில் நடந்த அனைத்து விவரங்களையும் சொன்னால், அதற்கு தீர்வு சொல்வதாக கூறுகிறார்.

யாகவன் வேறு வழியில்லாமல் நடந்ததை கூறுகிறார். அதன்படி, நிறைமாத கர்ப்பிணியான தனது அண்ணி கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததாகவும், அவள் இறந்த சோகத்தில் அண்ணனும் சில காலத்தில் இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

அண்ணியை மர்மமான முறையில் கொன்றவர் யார்? காயத்ரியின் உடம்பில் புகுந்துள்ள ஆவி யாருடையது? அவளுடைய உடம்பில் எதற்காக அந்த ஆவி புகுந்துள்ளது? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் விடை சொல்லியிருக்கிறார்கள்.

யாகவன் ரொம்பவும் அப்பாவியான தோற்றத்துடனே படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடமிருந்து பெரியதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், இவருக்கான காட்சிகள் ரொம்பவும் குறைவுதான். அந்த காட்சிகளுக்காகவாவது கொஞ்சம் சிரமம் எடுத்திருக்கலாம்.

அதேபோல், நாயகி காயத்ரியின் கதாபாத்திரமும் படத்தில் பெரிதாக இல்லை. அவரும் ஏதோ பொம்மை போல் வந்து போயிருக்கிறார். நாயகனுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.

அண்ணியாக வரும் கமலிக்குத்தான் படத்தில் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இருந்திருக்கிறது. படத்தின் இன்னொரு கதாநாயகி இவர்தான் என்று சொல்லலாம். ஆக்ரோஷமான காட்சிகளில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. செண்டிமென்டிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

ஜமீனாக வரும் அஜய் ரத்தினம் தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார். டெல்லி கணேஷ் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். போண்டா மணி தனது குழுவுடன் செய்யும் காமெடிகள் எல்லாம் பெரிதாக ரசிக்க முடியவில்லை.

இயக்குனர் கோபால், செண்டிமென்ட் கலந்த ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் திரில்லருக்குண்டான காட்சிகளை சரியாக அமைக்காதது வருத்தமே. அதேபோல், கதாபாத்திரங்களிடம் சரியாக வேலை வாங்க தவறியிருக்கிறார்.

இளநாயகனின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. பின்னணி இசையிலும் வேகம் கூட்டியிருக்கலாம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுக்கவில்லை.

மொத்தத்தில் ‘மங்களாபுரம்’ மங்களமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online