MENUMENU

அரசியல் களத்தில் ரஜினி : தலைவா வா… தலைமை ஏற்க வா என ரசிகர்கள் அழைப்பு

நான் ஒரு தடவ சொன்னா… 100 தடவ சொன்ன மாதிரி. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய இந்த ‘பஞ்ச்’ டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் இப்போதும் ரஜினி பேசிய அந்த வசனத்தின் வீரியம் குறையாமல் அதே காரத்துடனேயே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் வேகமே அவரது உத்வேகமாகும்.

ரஜினி படமா? கட்டாயம் தியேட்டர்ல போய் பார்க்கலாம் என்கிற எண்ண ஓட்டம் எல்லோரது மனதிலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ரஜினியின் படங்கள் வெளியாகும் அன்று அந்த படங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பே இதற்கு சான்றாகும். இதன் காரணமாகவே ரஜினியின் சில படங்களை தவிர்த்து பெரும்பாலான படங்கள் வசூலை வாரிக்குவித்து விடுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய ரஜினியின் இந்த வசூல் வேட்டை ‘கபாலி’ வரையிலும் ‘மகிழ்ச்சி’யாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் மத்தியில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் இந்த இதய சிம்மாசனம் ஒரே நாளில் மந்திரத்தில் மாங்காய் கிடைத்தது போல கிடைத்து விடவில்லை. இந்த இடத்தை பிடிப்பதற்கு அவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினியை 1975-ம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தின் வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலச்சந்தர். அதன் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் தனது விடாமுயற்சி, உழைப்பாலேயே ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் தங்க மகனாக மின்னிய ரஜினி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது. 1991-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த நேரம் அது.

அவரது 5 ஆண்டு கால ஆட்சி முடிந்து அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருந்தன. அப்போது நடந்த ‘பாட்ஷா’ படவெற்றி விழாவில் ரஜினி உதிர்த்த வார்த்தைகள் இவை.

அ.தி.மு.க.வுக்கு நீங்கள் மீண்டும் ஓட்டு போட்டால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ரஜினி கொளுத்தி போட்ட முதல் அரசியல் பட்டாசு இதுதான். அது அக்னி வெளியில் காய வைத்த அதிர்வேட்டாகவே வெடித்தது.

1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசில் இருந்து பிரிந்து த.மா.கா.வை தொடங்கிய மூப்பனார் தி.மு.க.வோடு ‘கை’ கோர்த்தார். அப்போதே ரஜினிக்கு அரசியல் ஆசை காட்டப்பட்டது. தி.மு.க.-த.மா.கா.

கூட்டணிக்குள் எப்படியாவது ரஜினியை இழுத்து வந்து முடிச்சுப் போட வேண்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். அதில் முதன்மையானவர் மூப்பனார். அந்த நேரத்தில் ரஜினியிடம் ‘தனிக் கட்சி’ தொடங்குமாறும் பலர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினர். ஆனால் ரஜினியோ அரசியல் களத்தில் குதிக்காமலேயே அரசியல் செய்தார்.

தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ஆதரிப்பதாகவும், தமிழக மக்கள் அந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இது…. தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை வெற்றி பெறச் செய்து உச்சாணிக்கொம்பில் அமர வைத்தது.

இதனை தொடர்ந்து தேர்தல் வரும் போதெல்லாம் ரஜினி வாய்ஸ் யாருக்கு? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியது. ஆனால் நாளடைவில் இந்த வாய்ஸ் மங்கிப் போய் விட்டது.

ரஜினியிடம் எந்த பத்திரிகையாளர் பேட்டி கண்டாலும் கடைசியாக எழுப்பும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். உங்கள் அரசியல் பயணம் எப்போது? அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்பதாகவே இருக்கும்.

இந்த கேள்விக்கு நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவன் கையில்தான் இருக்கு என்றே ரஜினி தொடர்ச்சியாக பதில் அளித்து வந்துள்ளார். இதனால் ரஜினியின் அரசியல் பயணம் கடந்த சில ஆண்டுகளாக ‘சஸ்பென்ஸ்’ ஆகவே நீடித்து கொண்டிருக்கிறது.

ரஜினியின் படங்களிலும் அவரது அரசியல் பயணம் தொடர்பான வசனங்களும் அதிகமாகவே இடம் பெற்று வந்துள்ளது. ‘முத்து’ படத்தில் ரஜினி காவி உடை தரித்து எதுவும் வேண்டாம் என சாமியாராக செல்லும் காட்சியில் விடுகதையா…. இந்த வாழ்க்கை என்ற பாடல் ஒலிக்கும். அதில் உனது ராஜாங்கம் (தமிழ்நாடு) இதுதானே.

தொண்டுகள் செய்யும் நல்லவனே. வடக்கே (இமயமலைக்கு) நீ சென்றால் நாங்கள் செல்வதெங்கே? என்கிற வரிகள் இடம் பெற்றிருக்கும். இப்படி தனது படங்கள் மூலமாக ஏதோ ஒரு காட்சியில் ரஜினியின் அரசியல் ஆசை வெளிப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.

ஆனால் ‘குசேலன்’ படத்தில் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களையெல்லாம் சுக்கு நூறாக்கும் அளவுக்கு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ‘அந்த படத்தில் சூப்பர் ஸ்டாராகவே நடித்திருக்கும் ரஜினியிடம், ஒரு காட்சியில் ‘ஆர்.சுந்தர்ராஜன் நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேள்வி கேட்பார்.

அரசியலுக்கு வருவேன்னு சொல்லுங்க… இல்ல வரமாட்டேன்னு சொல்லுங்க. எதுக்காக ரசிகர்களை போட்டு குழப்புறீங்க’ என்பார்.

இதற்கு பதில் அளிக்கும் ரஜினி. அதெல்லாம் நான் சினிமாவுக்காக பேசிய வசனங்கள். நீங்க அத…. நான் அரசியலுக்கு வருவேன்னு எடுத்துக்கிட்டா நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று எதிர் கேள்வி கேட்பார் ரஜினி.

இதன் மூலம் ரஜினி, தன் மனதில் உள்ளதை சினிமா மூலமாக வெளிப்படையாக சொல்லி விட்டார் என்றே அப்போது பேசப்பட்டது. இதன் பின்னும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ரசிகர்களின் ஆசைகள் அவ்வப்போது போஸ்டர்களாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளது.

“தலைவா…. வா…. தலைமை ஏற்க வா’’ எங்களை ஆள்பவனே…. தமிழகத்தை ஆளப்பிறந்தவனே என்பது போன்ற சுண்டி இழுக்கும் ஆரவார போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் காலம் காலமாகவே ஒட்டி வருகின்றனர்.

இதுநாள் வரையில் இதற்கெல்லாம் நேரடியாக பதில் அளிக்காத ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் வெளிப்படையாகவே வாய் திறந்துள்ளார்.

20 ஆண்டுக்கு முன்னர் ஒரு கூட்டணியை நான் ஆதரித்தது விபத்து என்று கூறி இருக்கும் ரஜினி, நான் அரசியலுக்கு வந்தால் நேர்மையானவனாக இருப்பேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆதரித்தது பற்றி 20 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கருத்து தெரிவிக்கும் ரஜினி, அது ஒரு விபத்து என்று வர்ணித்திருப்பதன் மூலம், ஒரு நிர்ப்பந்ததின் பேரிலேயே அந்த அணிக்கு அவர் ஆதரவளித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தற்போது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மறைவால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடல்நலம் கோளாறு காரணமாக முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார்.
இதுபோன்ற அரசியல் வெற்றிடத்தை எப்படியும் ஒரு ஆள் நிரப்பியே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த வெற்றிடத்தை நிரப்பி, அரசியல் களத்தில் வென்று விடலாம் என்கிற எண்ணமே ரஜினியை இப்படி பேச வைத்திருக்கிறது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு ‘மவுத் டாக்’ ஆக மாறி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் காரசாரமான கருத்து மோதல்களும் வலுப்பெற தொடங்கி உள்ளன.

‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா… வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’ என்று ‘முத்து’ படத்தில் அனல் தெறிக்க அரசியல் வசனம் பேசி இருப்பார் ரஜினி.

அதற்கான நேரமும்… காலமும் தற்போது கனிந்து விட்டதாகவே ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தற்போதுதான் தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ரஜினியின் ஆரம்ப கால ரசிகர்கள் இப்போது 50 வயதை தாண்டி இருப்பார்கள். ரஜினியை தலைவர் என்றே அழைக்கும் அதுபோன்ற ரசிகர்கள், யார்-யாரெல்லாமோ, அரசியலுக்கு வருகிறார்கள்.

தலைவர் மட்டும் தயங்கிகிட்டே இருக்கிறாரே? என்று ஆண்டாண்டு காலமாக ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தங்களின் மனம் கவர்ந்த தலைவன் அரசியலுக்கு வரமாட்டாரா? என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாகவே ரஜினி ரசிகர்களை வாட்டிக்கொண்டே இருந்தது.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பின் மூலம் ரசிகர்களின் இந்த ஏக்கம் தீர்ந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஏமாந்து போவீர்கள் என்று ரஜினி பேசி இருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது. ‘தலைவர் வந்துட்டார்’ என்று உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் ரஜினி அடியெடுத்து வைப்பது நூற்றுக்கு நூறு உறுதியாகி இருப்பதாகவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அருணாசலம் படத்தில் ‘‘அந்த ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்கிறான்’’ என்பார் ரஜினி.

அரசியலில் குதிக்கச் சொல்லி அந்த ஆண்டவனே ரஜினிக்கு கட்டளையிட்டிருப்பதாகவே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ரஜினியை பற்றி குறிப்பிடும்போது நேற்று… பஸ் கண்டக்டர் இன்று….

சூப்பர் ஸ்டார், நாளை…. தமிழக முதல்வர் என்றே ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால் ‘கபாலி’ பட வசனமான வந்துட்டேன்னு சொல்லு… நெருங்கி வந்துட்டேன்னு சொல்லு… என்று சமூக வலைதள பக்கங்களை ரசிகர்கள் ‘‘மகிழ்ச்சி’’யுடன் நிரப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online