MENUMENU

சங்கிலி புங்கிலி கதவ தொற – திரை விமர்சனம்

ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர் இறந்த நிலையில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டம் காரணமாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஜீவாவை ஊக்கப்படுத்தும் தாயாக வருகிறார் ராதிகா.

தனது தாயின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ஜீவா, ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் பேய் இருப்பதாக வதந்தியை பரப்ப வைக்கிறார். இதனால் அந்த வீட்டை வாங்க யாரும் முன்வராததால், குறைவான காசு கொடுத்து அந்த வீட்டை தானே வாங்கி, தனது அம்மா ராதிகா, மாமா இளவரசன், அவரது மகள், நண்பன் சூரி உள்ளிட்டோருடன் அங்கு குடிபெயர்கிறார்.

அதேநேரத்தில், அந்த வீட்டை உரிமை கொண்டாடி தம்பி ராமைய்யா, அவரது மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யா அதே வீட்டில் இருக்கின்றனர். முன்னதாக வீடு விற்க வந்த போது ஜீவாவை பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. தனது காதலை ஜீவாவுக்கு புரிய வைத்த பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் காதலித்து வருகின்றனர்.

இருந்தாலும் ஜீவாவுக்கும் – தம்பி ராமைய்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட வீடு யாருக்கு சொந்தம் என்ற முடிவு தெரியும் வரை, இரு குடும்பமும் ஒரே வீட்டிலேயே தங்கும் நிலைக்கு வருகின்றனர்.

தம்பி ராமைய்யா குடும்பத்தை அந்த வீட்டை விட்டு விரட்ட பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்யும் ஜீவா மற்றும் சூரி, அந்த வீட்டில் பேய் இருப்பது போல சூழ்நிலைகளை உருவாக்கி, பயமுறுத்துகின்றனர். ஆனால் அந்த வீட்டில் உண்மையிலேயே ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது பின்னர் தெரிய வருகிறது.

இதையடுத்து, பேய் இருப்பதை உறுதி செய்ய ஜீவா, சூரி இணைந்து அரசு ஊழியரான கோவை சரளாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதில் பேய் இருப்பது உறுதி ஆவதுடன், அவர்கள் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் நிலைக்கு அந்த அமானுஷ்ய சக்தி அவர்களை உந்துகிறது.

அந்த பேயின் முந்தைய கதை என்ன? அந்த பேயை விரட்ட ஜீவா என்ன செய்தார்? ஜீவா – ஸ்ரீதிவ்யா காதல் வெற்றி அடைந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.

தொடர் சரிவுகளை சந்தித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் சற்றே மேலே வந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவரது இயல்பான நடிப்பும், காமெடி கலந்த பேச்சுமே அவரை ரசிக்க வைக்கிறது. ஒரு மகனாகவும், காதலானகவும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படம் முழுக்க அழகு தேவதையாக வரும் ஸ்ரீதிவ்யா, காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆடைகுறைப்பு நடிகைகளுக்கிடையே முழுக்க போத்திக் கொண்டு வந்தாலும், ரசிக்கர்களை கவரும் ஸ்ரீதிவ்யாவுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஜீவா – ஸ்ரீதிவ்யா இருவருக்கும் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது.

ஒரு அம்மாவாகவும், வீடு வாங்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனும், சாதாரண குடும்பப் பெண்ணாகவும் ராதிகா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக்கில் வரும் ராதாரவி ஒரு தந்தையாகவும், பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். ஜீவாவுடன் இணைந்து படம் முழுக்க வரும் சூரி, வெகு நாட்களுக்கு பிறகு தனது ஸ்டைலில் காமெடி வசனங்களை உதிர்த்திருக்கிறார்.

திரையில் அவரது நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருக்கிறது. அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தம்பி ராமைய்யாவும், தேவதர்ஷினியும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

பேய் படம் என்றாலே கோவை சரளா இல்லாமல் இருப்பதில்லை. அதற்கேற்றாற்போல் கோவை சரளா, இப்படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரது பாணியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இளவரசு, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்டோரும் தங்கள் பங்குக்கு காமெடிக்கு கைக் கொடுத்திருக்கின்றனர்.

புதுமுக இயக்குநர் ஐக் ஒரு புதுவிதமான காமெடி த்ரில்லர் கதையை முயற்சி செய்திருக்கிறார். பேய் படங்கள் என்றாலே ஒரே மாதிரி தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில், இவரின் புதிய முயற்சி ரசிக்கும்படி இருக்கிறது.

கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். சுயநலத்துடன் பிரிந்து சென்று தனித்தனியே வாழ வரும்புபவர்களை கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை பேய் மூலமாக உணர்த்தி இருப்பது சிறப்பு.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு தத்ரூபமாக இருக்கிறது. குறிப்பாக பேய் வரும் காட்சிகளை காட்டுவதில் சிறப்பாக கேமராவை பயன்படுத்தி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டி இருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பிரேம்ஜி பாடியிருக்கும் பாடல் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.

மொத்தத்தில் `சங்கிலி புங்கிலி கதவ தொற’ சற்றே தொறந்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online