MENUMENU

பே வாட்ச் – திரை விமர்சனம்

ப்ளோரிடாவில் இருக்கும் எமரால்டு பீச், நாயகன் டுவைன் ஜான்சன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பேவாட்ச்சின் உயிர் காப்பாளரான (லைஃப்கார்டு) அவரின் கீழ் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது.

அந்த குழுவில் ஜான்சனின் கீழ், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அற்புதமான, அட்டகாசமான இந்த குழுதான் அந்த பீச்சின் உயிர் மூச்சு. ஆபத்து என்று வந்தால், யார் பயந்து ஓடினாலும், இந்த குழு அவர்களது உயிரை பணையம் வைத்து காப்பாற்றுகிறார்கள்.

பேவாட்ச் தலைவரான ராப் ஹுபெல் – டுவைன் ஜான்சன் தொடக்கம் முதலே எலியும், பூனையுமாக இருக்கின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அந்த குழுவுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதன்படி நடக்கும் தேர்வில் பல கடுமையான சோதனைகள் கொடுக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும், அலெக்சாண்ட்ரா தடாரியோ அந்த குழுவில் இணைகிறார்.

அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற ஜாக் எஃப்ரான், இந்த குழுவில் சேரும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றதால் நேரடியாக அந்த குழுவில் இணைந்து விடலாம் என்ற முடிவில் வரும் ஜாக் எஃப்ரானை தனது குழுவில் சேர்க்க டுவைன் ஜான்சன் மறுப்பு தெரிவிக்கிறார்.

எல்லோரையும் போல அவருக்கும் பல்வேறு சோதனைகளை வைத்து, அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஜாக் எஃப்ரான் அந்த குழுவில் இடம்பிடிக்கிறார். அதனாலேயே டுவைன் – ஜாக் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

தனது பணியை பொறுத்த வரையில், மற்றவர்களை விட டுவைன் ஜான்சனுக்கு ஈடுபாடு அதிகம். தன்னை நம்பி இருக்கும் இந்த கடற்கரைக்கும், கடலுக்கு செல்லும் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூாது. இவ்வாறு யாராவது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டால் முதல் ஆளாக அங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இவ்வாறாக அந்த பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் பிரியங்கா சோப்ரா அந்த பேவாட்ச் பக்கமாக கிளப் ஒன்றை வாங்குகிறார்.

எனவே பேவாட்ச் அருகில் இருக்கும் அனைவரையும் அவரது கிளப்புக்கு அழைக்கிறார். பிரியங்கா சோப்ராவின் அழைப்பை ஏற்று, டுவைன் ஜான்சன் அவரது குழுவுடன் அந்த கிளப்புக்கு செல்கிறார்.

அந்த நேரம் பார்த்து, கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவதாக டுவைனுக்கு தகவல் வர, அந்த கப்பலில் இருப்பவர்களை காப்பாற்ற தனது குழுவுடன் கடலுக்கு திரும்புகிறார்.

அங்கு சென்று பார்க்கும் போது, கப்பல் கொழுந்து விட்டு எரிய, கப்பலில் உள்ள இரு பெண்களை பேவாட்ச் குழு காப்பாற்றுகிறது. ஒரு ஆண் மட்டும் இந்த விபத்தில் இறந்து விடுகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக டுவைன் சந்தேகம் அடைகிறார். காப்பாற்றப்பட்ட இரு பெண்களிடமும் கஞ்சா இருப்பதையும் பார்த்து விடுகிறார்.

இதையடுத்து அந்த பீச்சில் கஞ்சா சப்ளை செய்வது, உள்ளிட்ட தவறான வேளைகளில் ஈடுபடுவது பிரியங்கா சோப்ராவாக இருக்குமா? என சந்தேகமடையும் டுவைன், பிரியங்கா சோப்ரா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு பேவாட்ச் குழுவுடன் செல்கிறார். அங்கு தங்களுக்கு தேவையான தடையம் ஏதேனும் கிடைக்குமா? என பேவாட்ச் குழுவினர் ரகசியமாக தேடி பார்க்கிறார்கள்.

அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பான சில தகவல்கள் கிடைக்கிறது. இதையடுத்து பிரியங்கா சோப்ராவை சட்டத்தின் கையில் சிக்க வைக்கும் முயற்சியில் டுவைன் இறங்குகிறார்.

இந்நிலையில், இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அவருக்கு பலரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் கஞ்சா கடத்தல் கும்பலை தொடர்ந்து மோப்பம் பிடிக்கும் டுவைனுக்கு பேவாட்ச் நிறுவனத்தினரின் வேலையும் பறிப்போய்விடுகிறது.

பிரியங்கா சோப்ராவின் சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்தினாரா? பிரியங்காவை போலீசில் சிக்க வைத்து பேவாட்ச்சை காப்பாற்றினாரா? அவருக்கு மீண்டும் வேலை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து, ரசிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான தருணத்தையும், ஒரு காமெடி இடமாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைப்பது ரசிக்கும்படி இருக்கிறது. `ஏ’ பட வசனங்களில் பேசி ஆங்காங்கே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார். எனினும் அவரது உடற்கட்டுக்கு ஏற்ப ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் இல்லை என்பது ஒரு வருத்தம்.

ஜாக் எஃப்ரான் தனக்கே உரிய தனித்துவமான பாணியில் அனைவரையும் கவர்கிறார். டுவைன் ஜான்சனுடன் அவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பேச்சில் ரசிக்க வைத்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் என்பதால், ரசிகர்களிடையே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

பிரியங்கா இப்படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று, அதாவது ஒரு வில்லியாக நடித்திருக்கிறார். ஒரு வில்லிக்குண்டான கெத்துடன், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியாக வந்தும் ரசிக்க வைக்கிறார்.

இதுதவிர ராப் ஹுபெல், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ், அலெக்சாண்ட்ரா தடாரியோ உள்ளிட்டோர் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வெற்றி நடைபோட்ட பேவாட்ச் என்ற தொடரை படமாக இயக்கி இருக்கும் செத் கார்டன், அவரது இயக்கத்திலும், திரைக்கதையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி கலந்த பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கி இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

முக்கியமான காட்சியிலும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் இயக்கி இருப்பதால் படம் போவதே தெரியவில்லை. குறிப்பாக தமிழில் வசனங்கள் சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் இருக்கிறது. தமிழில் வசனங்களை எழுதியவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார்.

எரிக் ஸ்டீர்பெர்க்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ளோரிடா கடற்கரையை தனது கேமரா மூலம் அழகாக காட்டியிருக்கிறார். கிறிஸ்டோபர் லென்னட்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் `பேவாட்ச்’ கோடைக்கு ஏற்ற சுற்றுலாத்தளம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online