7 நாட்கள் – திரை விமர்சனம்

சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரே பிளாட்டில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடக்கம் முதலே இருவரும் எலியும், பூனையும் போல சண்டை பிடிக்கின்றனர். எப்.எம்.-ல் ஆர்.ஜே-வாக பணிபுரிகிறார் சக்தி. நிகிஷா, பிரபு நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

பிரபுவின் வளர்ப்பு மகனான கணேஷ் வெங்கட்ராம், சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரபுவின் சொந்த மகனான ராஜுவ் கோவிந்த பிள்ளை, வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ஊர் சுற்றி வருகிறார்.

ராஜுவ், பெண்கள் விஷயத்தில் விஷேச ஈடுபாடு உடையவர். நிறைய பெண்களுடன் பழகி வருகிறார். பல பெண்கள் பின்னால் சுற்றி வருகிறார். இதில் அவர் சுற்றி வரும் பெண்களில் இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.

ராஜுவ்வின் திருமணத்தை நடத்த ஆசை பட்டு வரும் பிரபு, அந்த பெண்கள் கொலைக்கு பிறகு ராஜுவ்வின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார். இந்நிலையில், பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் அந்த மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, ராஜுவ் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று, இந்த பிரச்சனையை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார்.

இந்நிலையில், பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர் இறந்து போக, அந்த வீடியோ ஆதாரம் சக்தி, நிகிஷா படேல் இருவரில் யாரிடமோ இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது.

அந்த வீடியோ ஆதாரத்தை அவர்களிடம் இருந்து மீட்க கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? சண்டைபிடித்து வரும் சக்தி – நிகிஷா படேல் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

சரிவர படங்கள் அமையாததால், வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சக்திக்கு. இந்த படம் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்ல முடியாது. கடைசியாக ‘சிவலிங்கா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சக்திக்கு இப்படத்தில் சரியான கதைக்களம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கணேஷ் வெங்கட்ராம் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ஸ்டைலீஷ் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு முன்பு நடித்த படங்களில் நிகிஷா படேலுக்கு பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அதே போல் இப்படத்திலும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறார். மற்றொரு நாயகியான அங்கனா ராய், கதைக்கு பக்கபலமாக குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையான நடிப்பை கொடுக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜுவ் கதையின் முக்கிய கருவாக, உடற்கட்டுடன் கலக்கியிருக்கிறார்.

பிரபு ஒரு தந்தையாக, தொழிலதிபராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து செல்கிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், சினிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் கடைசியாக நடித்த படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு ரசிக்க வைக்கிறார்.

கவுதம். வி.ஆர். ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சில காட்சிகளில் மிகையான நடிப்பு வெளியாவதை உணரமுடிகிறது. அன்றாட வாழ்க்கையில் நிகழாத சில காட்சிகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. அது மட்டுமல்லாமல் பாடல்கள் வரும் இடங்களும் சரியானதாக இல்லை. சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஓகே.

மொத்தத்தில் `7 நாட்கள்’ ரொம்ப நீளம்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries