MENUMENU

பீச்சாங்கை – திரை விமர்சனம்

நாயகன் கார்த்திக் பிரபலமான பிக்பாக்கெட் திருடன். இவனுக்கு இவனுடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.

ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.

அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது.

இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.

பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.

மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online