MENUMENU

ரூபாய் – திரை விமர்சனம்

நாயகன் சந்திரன் மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் தேனியில் இருந்து சென்னைக்கு லாரியில் பூ லோடு ஏற்றி வருகின்றனர். லாரிக்கு தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேனி திரும்பும் வேளையில் ஏதாவது லோடு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வரும் சினிஜெயந்த், வீடு மாற்றிப் போவதற்காக அங்குள்ள லாரி ஓட்டுநர்களிடம் சவாரிக்காக பேசி வருகிறார். அவர்கள் அனைவரும் அதிக தொகை கேட்க, குறைவான தொகைக்கு வருவதாக சந்திரன் கூற அவரை கூட்டிச் செல்கிறார்.

அந்த பகுதிக்கு சென்ற பிறகு தான் சினிஜெயந்த் குறித்து தெரிய வருகிறது. சினிஜெயந்த், அவரது பகுதியில் இருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்து வருகிறார். சினிஜெயந்த்தை பார்த்தாலே பணம் கேட்பார் என்று அனைவரும் பறந்து விடுகிறார்கள்.

இந்நிலையில், சினிஜெயந்துக்கு பணம் கொடுப்பதும், உண்டியலில் பணம் போடுவதும் ஒன்று தான் என்னும் அளவுக்கு அவரைப் பற்றி அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஆனந்தியை பார்க்கும் சந்திரனுக்கு முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் வந்துவிடுகிறது.

இதைகேட்ட கிஷோர், சந்திரனிடம் இந்த சவாரி வேண்டாம், திரும்பிப் போகலாம் என்று கூறுகிறார். ஆனால், ஆனந்தி மீதுள்ள காதலால் கிஷோரை சமாளித்து கூட்டிச் செல்கிறார். மறுபுறத்தில் ஹரிஷ் உத்தமன், வங்கி ஒன்றுக்கு, கீழே வாடகைக்கு வீடு எடுத்து, அந்த வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். அவரை போலீசார் துரத்திச் செல்வதால், அந்த பணத்தை சந்திரனின் லாரியில் வீசிவிட்டு தப்பித்துச் செல்கிறார்.

இதனிடையே வெகுநேரமாகியும், சினிஜெயந்துக்கு வீடு கிடைக்காததால், கோபமடையும் கிஷோர், சினிஜெயந்திடம் சண்டை பிடிக்கிறார். அவர்களது சண்டையில், லாரியில் இருக்கும் பொருட்களை இருவரும் தூக்கி வீசுகின்றனர்.

அப்போது பணம் இருக்கும் அந்த பையையும் தூக்கி வீச, பணம் வெளியே வருகிறது. அவ்வுளவு பணத்தை பார்த்த சினிஜெயந்த்துக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று விடுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அனைவரும் ஒன்றாகி விடுகின்றனர். மேலும் அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பணத்தை தேடி செல்லும் ஹரிஷ் உத்தமன் அதற்காக, பல பேரை கொலையும் செய்கிறார். இந்நிலையில், ஹரிஷ் உத்தமனிடமிருந்து, சந்திரன், கிஷோர் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்தார்களா? சந்திரன், ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்தினாரா? சந்திரனின் காதலுக்கு சினிஜெயந்த் பச்சை கொடி காட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

லாரி ஓட்டுநராக சந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், காதல் என்ற பெயரில் எல்லா நேரத்திலும் சிரித்துக் கொண்டு சமாளிப்பது ரசிகர்களுக்கு ஒருவித முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான நேரத்திலும் காதல் என்ற பெயரில் அவர் செய்யும் காதல் கடுப்பை கிளப்பும்படி இருக்கிறது.

கயல் ஆனந்தி இதற்கு முன்பு நடித்த படங்களைப் போல இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மேக்கப் ஏதுமின்றி நடித்திருப்பது சிறப்புக்குரியது. பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமால் விலகியிருந்த சினிஜெயந்த், இந்த படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆகியிருக்கிறார். அவரது பாணியில் கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருப்பது சிறப்பு.

குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சந்திரனின் நண்பனாக வரும் கிஷோர் ரவிச்சந்திரனின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

சாட்டை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வெற்றி பெற்ற இயக்குநர் அன்பழகன், இந்த படத்தில் அந்த வெற்றி என்னும் கனியை பறிக்க தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். பணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாதது.

அதற்கான போராட்டத்தில், ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள், அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை ஒரு காதலுடன் கூறியிருக்கிறார். இதில் காதலுக்கான திரைக்தையை அமைப்பதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். வி.இளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது.

மொத்தத்தில் `ரூபாய்’ கொஞ்சமாவது கொடுத்திருக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online