வார் பார் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் – திரை விமர்சனம்

வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படத்தின் இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் தொடர்கிறது. கடந்த பாகத்தில் குரங்குகள் ஒரு அணியாகவும், மனிதர்கள் ஒரு அணியாகவும் இருப்பார்கள். இதில் குரங்கு கூட்டத்தில் உள்ள ஒரு குரங்குக்கு மட்டும் மனிதர்களை பிடிக்காது. ஆனால் குரங்குகளின் தலைவனான சீசர், மனிதர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று கூறி, மற்ற குரங்குகளை சமாதானப்படுத்துகிறது.

சீசரின் பேச்சைக் கேட்காத அந்த வெள்ளை குரங்கு, சீசரை மனிதர்கள் கொலை செய்துவிட்டதாகக் கூறி மனிதர்கள் – குரங்குகள் இடையே கலவரத்தை உண்டுபண்ணுகிறது. மேலும் மனிதர்களிடம் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிவிடும்படி கடைசி பாகம் முடிந்திருக்கும்.

ஆனால் அந்த பாகத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சீசரை மனிதர்கள் காப்பாற்றி, அதற்கு தேவையான சிகிச்சை அளித்திருப்பார்கள். இதையடுத்து, மனிதர்களின் உதவியோடு, அந்த வெள்ளை குரங்குடன் இருக்கும் கெட்ட குரங்களை சீசர் கொன்று விடுகிறது. இதையடுத்து சீசரின் பின்னாள் மற்ற குரங்குகள் வந்து சேர, மனிதர்களை காட்டிலிருந்து வெளியேறி அவர்களது இடத்திற்கு போகும்படி சீசர் கூறிவிடுகிறது.

இதையடுத்து மனிதர்கள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். எனினும் வெள்ளை குரங்கு, மனிதர்கள் திரும்பவும் வருவார்கள் என்று கூறி, பயமுறுத்துகிறது. இந்நிலையில், சீசரின் மூத்த மகன், தனக்கு பாதுகாப்பான இடம் ஒன்று தெரியும் என்று கூறி, அங்கு அனைவரும் நிம்மதியாக வாழலாம் என்று கூறுகிறது. இதையடுத்து அனைவரும் அந்த பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் போது, காட்டில் மனித நடமாட்டம் இருப்பதை சீசர் கண்டுபிடிக்கிறது.

இந்நிலையில், கலோனல் தலைமையிலான மனிதர்கள், சீசரின் மனைவி மற்றும் மகனை கொன்று விடுகிறது. இதையடுத்து கலோனலின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கும் சீசர், தன் இனத்தை அந்த பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, தனது மனைவி, மகனை கொன்ற கலோனலைக் பழிவாங்க செல்கிறது. ஆனால், கலோனலைக் கண்டுபிடிக்கும் முன்பே, கலோனல் சீசரின் இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து விடுகிறது. மேலும் சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்கிறது.

இவ்வாறு சிக்கிக் கொள்ளும் சீசர், தனது இனத்தை எப்படிக் காப்பாற்றுகிறது? அதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டது? கலோனல் மற்றும் அந்த வெள்ளை குரங்கை சீசர் பழிவாங்கியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கலோனலாக நடித்திருக்கும் வூடி ஹாரல்சன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குரங்குகளுடன் அவருக்குண்டான கோபமும், அதனை பழிவாங்க மேற்கொள்ளும் ஆக்ரோஷமான முயற்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.

கடைசி பாகத்தின் தொடர்ச்சியாக, உயிரோடு வரும் சீசர், தனது இனத்தை காப்பாற்ற, மனிதர்களை எப்படி எதிர்கொள்கிறது. அதில் மனிதர்களி்ன் பொறியில் சிக்கி மீண்டும், தனத இனத்தை காப்பாற்றியிருப்பதை சிறப்பாக இயக்கியிருக்கிறார். படத்தின் சி.ஜி. வேலைகளில் படக்குழு சிறப்பாக ஈடுபட்டிருக்கிறது. மாட் ஏப்ஸ் மூலம் அங்கங்கு சிரிப்பு வரும்படி இருக்கிறது. பாசம், ஏக்கம், சண்டை, காமெடி என அனைத்தையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

மைக்கேல் ஜியோசினோவின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஒரு காட்சிக்கும் பதபதைக்கும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். மைக்கேல் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. எனினும் 3டி-யில் பார்க்கும் போது பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் பார்ப்பதற்கு நேயர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் `வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ முடிந்தது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online