எனக்கு டைரக்‌ஷன் ஆசை கிடையாது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி உதயநிதி ஸ்டாலின், நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“பொதுவாக எம்மனசு தங்கம்,’ முதன் முதலாக நான் நடித்துள்ள கிராமத்து கதை. சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை சொல்லியிருக்கும் படம். வேறு ஒரு நிறுவனம் தயாரித்த படத்தில், முதல் முறையாக நான் நடித்த படம். சாமி தொடர்பான காட்சிகளில் நான் நடித்திருக்கும் முதல் படமும் இதுதான்.

ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிற ஆளாக நான் நடித்து இருக்கிறேன். வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நீயா, நானா? என்ற போட்டி இருக்கும். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக வருவார். என் கூடவே வரும் நண்பராக, ‘டைகர் பாண்டி’ என்ற வேடத்தில் சூரி நடித்து இருக்கிறார். ‘பொதுவாக எம்மனசு தங்கம்,’ இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.”

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஹன்சிகா, நயன்தாரா, எமிஜாக்சன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா என பிரபல கதாநாயகிகள் அனைவரும் உங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இவர்களில், உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?

பதில்:- என் படங்களில், கதைக்கு பொருத்தமான கதாநாயகிகளை தேர்வு செய்து நடிக்க வைப்பது, டைரக்டர்கள்தான். கதாநாயகிகளை நான் முடிவு செய்வதில்லை.

கேள்வி:- உங்களை பற்றி கிசுகிசுக்கள் வரும்போது, அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

பதில்:- ஒரே கதாநாயகியுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்தால், கிசுகிசு வந்து விடும். அதை நான் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை.

கேள்வி:- நடிப்பு, தயாரிப்பு ஆகிய இரண்டு பொறுப்புகளை கவனிக்கும் உங்களுக்கு டைரக்‌ஷன் ஆசை இருக்கிறதா?

பதில்:- எனக்கு டைரக்‌ஷன் ஆசை கிடையவே கிடையாது. நடிப்பு, தயாரிப்பு இரண்டுமே பெரிய பொறுப்புகள்தான். அது தொடரும். என் படங்களை வாங்கும் வினியோகஸ்தர்கள், திரையிடும் தியேட்டர் அதிபர்கள், படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் சந்தோஷமாக இருந்தால் போதும்.

கேள்வி:- ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை அடுத்து நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் எது?

பதில்:- ‘இப்படை வெல்லும்.’

மேற்கண்டவாறு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online