MENUMENU

‘ஜாடை மொழியில் ஜன கண மன’: அமிதாப் பச்சன் பங்களிப்பில் பட்டையை கிளப்பும் தேசிய கீதம்

மறைந்த வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ’ஜன கண மன’ என தொடங்கும் பாடல் நமது சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 27-12- 1911 அன்று கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்தபோது முதன்முதலாக இந்தப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சவுதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

பிரிட்டிஷ் முடியாட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “ஜன கன மண’ பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும் “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அறிவித்தார்.

தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.

தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும் தேசிய கீதமம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை. பொதுவாக 52 வினாடிகளுக்கு இந்தப் பாடல் இசைக்கப்படுவது மரபாக உள்ளது.

வங்காள மொழியில் இயற்றப்பட்ட தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக அரசு பாடநூல்களில் இடம்பெற்றுள்ளது.

’இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!’ என்பது இந்த நாட்டுப் பண்ணின் பொருளாக அமைந்துள்ளது.

இந்த தேசிய கீதத்தின் பொருளை வங்காள மொழி அறியாத மக்கள் தங்களது மொழியின் மூலம் அறிந்துகொள்ள இயலும். ஆனால், பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களுக்கும் நமது தாய்நாட்டின் பெருமையும், தேசிய கீதத்தின் அர்த்தமும் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்களுக்கான ஜாடை மொழி தேசிய கீதத்தை வீடியோவாக உருவாக்க மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் தீர்மானித்தது.

மத்தியப் பிரதேசம் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் டெல்லி செங்கோட்டை பின்னணியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மாற்றுத் திறனாளிகளுடன் சேர்ந்து தேசிய கீதத்தின் பொருளை ஜாடை மொழியில் பாடுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது.

இதுவரை பல்வேறு தரப்பினரால் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலகோடி மக்களின் கண்களையும், கருத்தையும் இந்த வீடியோ கவர்ந்திழுத்து வைரலாகி வருகிறது.

வரும் 15-ம் தேதி நாட்டின் 70-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் கண்ணைக்கவரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்…,

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online