MENUMENU

விழித்திரு – திரை விமர்சனம்

நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.

திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.

இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார்.

அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.

மறுபக்கம், தன் குழந்தையுடன் கண் தெரியாமல் வாழ்ந்து வரும் வெங்கட் பிரபு, தான் வளர்த்த நாய் குட்டி காணாமல் போக, அதை தேடி வருகிறார்.

அதுபோல், பணத்தால் எல்லாத்தையும் வாங்க முடியும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ராகுல் பாஸ்கரன், பணத்தை வைத்து ஒரு பெண்ணை அடைய நினைக்கிறார்.

இந்த நான்கு கதைகளும் ஒரு சந்திப்பில் இணைகிறது. இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

திருடனாக வரும் விதார்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பர்ஸை பறிக்கொடுத்து பிரச்சனையில் சிக்கும் கிருஷ்ணாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கண் தெரியாமல் யதார்த்தமாக நடித்து மனதில் பதிகிறார் வெங்கட் பிரபு. வசதி படைத்தவராக நடித்திருக்கும் ராகுல் பாஸ்கரன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.

திருடியாக வரும் தன்ஷிகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘விழித்திரு’ சுவாரஸ்யம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online