MENUMENU

நட்பு வேறு அரசியல் வேறு, ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க தயாராகி வருகிறார். இதற்காக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

வருகிற 21-ந்தேதி தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது அரசியல் கட்சிக்கு 3 விதமான பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளார். இதில் ஒன்றை தேர்வு செய்வது பற்றி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும், நெருக்கமானவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
நாளை டெல்லியில் தேர்தல் கமி‌ஷனில் கமல்ஹாசன் சார்பில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார்.
கமல்ஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் சில வழிகள் மூலம் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ரஜினிகாந்தின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். நானும் விரைவில் அறிவிக்க உள்ளேன். ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது. அது காவிக்கான அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். ரஜினியின் கொள்கையின் அடிப்படையிலேயே அவருடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை. அரசியல் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. எந்த காரணத்துக்காகவும் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. ஓட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வாங்கினால் 15 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது. நான் சைவம் அல்ல. ஆனால் மாட்டுக்கறி உண்ண மாட்டேன். மாட்டுக்கறி உண்ணக் கூடாது என்று மற்றவர்களை சொல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனித்து போட்டியிடும் பட்சத்தில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘மக்களின் தீர்ப்பை மதிப்பேன்’’ என்றார்.
பின்னர் ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நான் தேர்ந்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.
திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதுவே மாநில அரசின் நிதிச்சுமைக்கு காரணமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்க முடியாது.
பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்காக போராடினார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார், காந்தி எனது ஹீரோக்கள்.
நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்.
இவ்வாறு கமல் பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online